Sunday, 9 December 2012

திருநீற்று பச்சிலை

 திருநீற்றுப் பச்சிலை, துளசியின் குடும்பத்தைச் சார்ந்த தாவரமாகும். பச்சிலை என்று குறிப்பிடப்படும் இத்தாவரத்தின் இலை, தண்டு, பூ என அனைத்துப் பகுதிகளும் மிகுந்த மணமும், மருத்துவக் குணமும் கொண்டவை.

பொதுவாக இவ்வகை இனத்தாவரங்கள் வெப்ப மண்டலப் பகுதிகளின் வீணான இடங்கள், சாலையோரங்களில் தானாகவே வளரும் தன்மை கொண்டவை.

நஞ்சினை முறிக்க மாற்று மருந்தாகப் பயன்படுகிறது. கிராமப்புறங்களில் கை வைத்தியத்திற்கு இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது. ஜுரத்தைக் குறைத்து வியர்க்கச் செய்யும் பூச்சிகளை அகற்றும் கிருமி நாசினியாகும். நோயை ஆற்றும். கபத்தை வெளியேற்றும்.

புண்கள், காயங்களுக்கு வெளிப்பூச்சாக இதன் இலைசாறைத் தடவலாம். அஜீரணத்தைப் போக்கும். முத்திரக்கல்லை நீக்கும். படர்தாமரை நோயைக் குணப்படுத்தும். இதிலிருந்து எடுக்கப்படும் தைலம் சரும நோய்களும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

பச்சிலையை புண், பரு, பேன் இவைகளைப் போக்க தேய்த்துக் குளிக்கலாம். இதன் மணத்திற்காக எண்ணெய் முறைகளில் சேர்ப்பதுண்டு. பச்சிலை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி, சடாமாஞ்சில், வாய்விடங்கம், கசகசா, கார்போக அரிசி, சந்தனம், கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு இவைகளைப் பொடித்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு எண்ணெயில் குழைத்துப் பூசி தலை முழுகினாலும், பொடியைத் தனியாக தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு, சொறி, கற்றாழை நாற்றம் போகும். உடல் சூடு தணியும்.

இலைச்சாறு பருக்கள், வடுக்கள் போன்றவற்றிலிருந்து சருமத்தைக் காக்கிறது. இதன் சாறுடன் வசம்பு சேர்த்து, அரைத்து சருமத்தில் தோன்றும் பருக்களுக்குப் போட்டால் விரைவில் குணம் தெரியும். புரையோடி சீழ் வைத்த பருக்களுக்கும், விஷப் பருக்களுக்கும் மூன்று வேளை தடவ பரு காய்ந்து உதிர்ந்து விடும்.

கண்களுக்கு இலையின் சாறு தடவ கண்கட்டி போன்ற கண் நோய்கள் குணமாகும். விதைகள் குளிர் பானங்களுக்கு நறுமணமும், குளிர்ச்சியும் கொடுக்க பயன்படுத்தப்படுகின்றன.


2 comments: