Friday, 16 June 2017

ம பொ சி

ம பொ சி
ம பொ சி என்றதும் பழைய நினைவு. சிதம்பரம் பிள்ளையின் ஜீவிய சரித்திரம் என்ற நூலினை எங்கள் நூலகத்தில் பார்த்ததாக பெ சு மணி என்னும் இலக்கிய அன்பர் ஒருவர் ம பொ சி அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் என் மேல் அதிகாரிக்கு போன் செய்து நூலினைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். நூலை தேடுகின்றோம் கிடைக்கவில்லை. இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது மொத்த நூற்கள். அது இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. நூலகத்தில் உள்ள பதினைந்து அலுவலர்களும் தேடியும் கிடைக்கவில்லை. சனி ஞாயிறு இரண்டு நாட்களும் யாருக்கும் லீவு கிடையாது பணிக்குவது நூலை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்றார் அதிகாரி. பிறகு சனிகிழமை அனைவரும் வந்து தேடினோம் . மாலையில் அது என் கைக்கு அகப்பட்டுவிட்டது.மறுநாள் நானே அந்த நூலினை எடுத்துக் கொண்டு ஆழ்வார் பேட்டை யில் இருக்கும் அவரது இல்லத்துக்குச்சென்று நூலினை அவரிடம் நேரில் வழங்கினேன். இது நடந்த ஆண்டு 1987

Thursday, 27 October 2016

நவீன இலக்கியம்

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன இலக்கியப் புதிவுகள் எதையும் படிப்பதில்லை என்று முடிவு கட்டிவிட்டேன். கடந்த பதினைந்து ஆண்டுகளாக திருமூலர் திருமந்திரம் வாசித்துக் கொண்டு இருக்கிறேன். அது நீண்டு கொண்டே செல்கிறது. இப்பிறவிக்கு இது போதும். மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.

Thursday, 20 October 2016

கிரீடம்

35 வருடங்களுக்குமுன் மயிலாப்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. நான் அதற்கு முன் பெருமாள் கோவில் சென்றது இல்லை. கோவிலில் எல்லோருக்கும் தலையில் கிரீடம் வைத்து ஆசி வழங்கினார்கள். தலையில் கிரீடம் வைத்தவுடன் உடம்பு புல்லரித்தது. மிகவும் மகிழ்ந்தேன். மறுநாள் அலுவலகத்தில் நண்பர்களிடம் இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். அப்பொழுது ஒரு வைணவ அன்பர் உங்கள் தலையில் வைக்கப்பட்டது கிரீடம் அல்ல என்றும் பெருமாள் பாதம் (சடாரி)என்று சொன்னதும் எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இனி பெருமாள் கோவில் பக்கம் போகக் கூடாது என்று முடிவு கட்டி விட்டேன்.
15 ஆண்டுகளுக்கு முன்னர்தான் முறைப்படி யோகப் பயிற்சி கற்றுக் கொண்டேன். அதன் பின்னர் திருமந்திரமும் படிக்க ஆரம்பித்தேன். அதன் பின்னரே தலையில் பெருமாள் பாதம் வைப்பதன் உள் அர்த்தம் புரிந்தது. சன்னதியில் வைக்கப்பட்ட சிலையை வணங்கும் பக்தர்களே இறைவன் இந்த சிலையில் இல்லை உங்கள் தலை உச்சியில் இறைவன் உறைந்திருக்கிறார் என்று சூசகமாகச் சொல்லுவது புரிந்தது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடி சேரார்—-----குறள்


பிறவியாகிய  இந்த உடம்பில்  உள்ள  ஆறு  ஆதாரங்களே  பெருங்கடல். இந்த ஆதாரங்களை  யோகசாதனை  மூலம் மட்டுமே கடந்து தலை உச்சியில்  உள்ள  இறைவன் திருவடியை  (துரியநிலை) அடைய முடியும்.  என்று திரு வள்ளுவரும்  அதை ஆமோதித்திருக்கிறார்

Tuesday, 11 October 2016

ஆயுத பூஜை: ஒருசிந்தனை.

ஆயுத பூஜை: ஒருசிந்தனை.
                                                   .                                              
தமிழ் எழுத்துக்களில் இது . .ஆயுதஎழுத்து எனப்படும். இந்த ஆயுதஎழுத்தானது நம் உடலில் சூரியநாடி, சந்திரநாடி மற்றும் சுழுமுனை நாடி ஆகியவைகளாக படிமம் கொண்டுள்ளது. இது உடலுக்கும் உள்ளத்துக்கும் வலு உண்டாக்கக் கூடிய ஆயுதமாகும். இவ்வாயுதத்தை நாள்தோறும் பயன்படுத்துவதே பிறவிப் பயன் என்பதை நினைவு கூறவே ஆயுதபூஜை கொண்டாடப் படுகிறது என்று நினைக்கிறேன்.

Wednesday, 24 August 2016

கிருஷ்ண ஜெயந்தி


கிருஷ்ண ஜெயந்தி என்றால் அன்று அரசு விடுமுறை என்றுதான் தெரியும். சில சினிமா படங்களைப் பார்த்த பின்பு அன்றையதினம் சிலர் வீட்டு வாசலில் கிருஷ்ணன் பாதங்களை வரைவார்கள் என்று தெரிந்து கொண்டேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் புதல்வனுக்கு திருமணம் செய்வதற்குப் பெண் பார்க்கத் துவங்கினேன். நாழிதளில் வந்த விளம்பரத்தை பார்த்து பெண் வீட்டாரின் முகவரியைக் குறித்துக் கொண்டேன்.
முகவரியை கண்டுபிடித்துவிட்டேன். அந்த வீட்டு வாசலில் ஒரு பெண்மணி கிருஷ்ணன் பாதங்களை வரைந்து கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த பின்னர்தான் அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தி என்று தெரிந்து கொண்டேன்.அவரிடம் நான் முகவரியைக் குறித்து விசாரித்தபோது மாடிக்கு போகுமாறு படிக்கட்டுகளைக் காட்டினார். படிகள் எல்லாம் கிருஷ்ணன் பாதங்கள். அவைகளை மிதிக்காமல் நடந்து சென்று அங்கிருந்த வீட்டுவாயிலில் குரல் கொடுத்தேன்.
வீட்டில் ஒரு இளம்பெண்ணும் அவரது தாயும் இருந்தார்கள். என்னை நான் அறிமுகப் படுத்திக் கொண்டு வந்த விஷயத்தைச் சொன்னேன். அந்த இளம் பெண் என்னிடம் வாசலில் கிருஷ்ணன் பாதம் வரைவது தனது அக்கா என்றும் அவருக்குத்தான் மாப்பிள்ளை பார்க்கிறோம் என்றும் சொன்னார்கள். சிறிது நேரத்தில் அந்த பெண்ணும் வந்து விட்டது. அவர்களின் தாயார் எங்கள் குடும்பம் பற்றி விசாரித்தார். அவர்களைப் பற்றியும் சொன்னார். அவ்வளவுதான் தெரியும். திடீரென்று நான் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலி சடசட என்று நொறுங்கி சுக்கு சுக்காக உடைந்து நான் கீழே விழுந்து விட்டேன்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த அம்மாவும் அவரது மகளும் என்னைக் கைபிடித்து வேறு ஒரு நாற்காலியில் அமர வைத்தார்கள். அடிபட்டு விட்டதா என்று பதறிப் பொய் கேட்டார்கள். நான் அதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டேன். உண்மையில் அடி என்றால் செம அடி . இடுப்புக்குக் கீழே உட்காரும் இடத்தில் சரியாக ஒரு மாதம் வலித்துக் கொண்டிருந்தது. பின்னர் பையனின் புகைப்படம், ஜாதகக் குறிப்பு மற்ற விபரங்களை அவர்களிடம் கொடுத்தேன். நான் கீழே விழுந்த சம்பவம் அங்கு ஒரு இறுக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டதை உணர்ந்து நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டேன். அதன் பின்னர் ஒவ்வொரு கிருஷ்ண ஜெயந்தி அன்றும் காலண்டரை பார்க்கும் பொழுது அடிபட்ட சம்பவம்தான் நினைவுக்கு வரும்.

Thursday, 7 July 2016

கஞ்சா

1970 sslc படிக்கும்போது வகுப்புத்தோழன் புண்ணியத்தால் அந்தபாக்கியம் கிடைத்தது. முதல் அனுபவம் என்றும் பசுமையாக உள்ளது. சுமார் ஏழு ஆண்டுகள் அதைஅனுபவித்தும் முதல் அனுபவத்தில்  நான் கண்ட  அற்புதக் காட்சிகள் வேறு எப்பொழுதும் காணவில்லை. பிறகு நண்பன்ஒருவன் மாரடைப்பில் இறந்துவிட்டான். வயது 25 . அந்தப் பழக்கத்தில் மிகவும் கைதேர்ந்தவன். நல்லவனும் கூட. என்ன செய்வது. பயந்து விட்டேன். அந்தப் பழக்கத்தை உடனடியாக விட்டுவிட்டேன். பெரும்பாலான தீய பழக்கங்களை நான் விடுவதற்கு பயமே காரணம்