Wednesday, 24 August 2016

கிருஷ்ண ஜெயந்தி


கிருஷ்ண ஜெயந்தி என்றால் அன்று அரசு விடுமுறை என்றுதான் தெரியும். சில சினிமா படங்களைப் பார்த்த பின்பு அன்றையதினம் சிலர் வீட்டு வாசலில் கிருஷ்ணன் பாதங்களை வரைவார்கள் என்று தெரிந்து கொண்டேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் புதல்வனுக்கு திருமணம் செய்வதற்குப் பெண் பார்க்கத் துவங்கினேன். நாழிதளில் வந்த விளம்பரத்தை பார்த்து பெண் வீட்டாரின் முகவரியைக் குறித்துக் கொண்டேன்.
முகவரியை கண்டுபிடித்துவிட்டேன். அந்த வீட்டு வாசலில் ஒரு பெண்மணி கிருஷ்ணன் பாதங்களை வரைந்து கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த பின்னர்தான் அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தி என்று தெரிந்து கொண்டேன்.அவரிடம் நான் முகவரியைக் குறித்து விசாரித்தபோது மாடிக்கு போகுமாறு படிக்கட்டுகளைக் காட்டினார். படிகள் எல்லாம் கிருஷ்ணன் பாதங்கள். அவைகளை மிதிக்காமல் நடந்து சென்று அங்கிருந்த வீட்டுவாயிலில் குரல் கொடுத்தேன்.
வீட்டில் ஒரு இளம்பெண்ணும் அவரது தாயும் இருந்தார்கள். என்னை நான் அறிமுகப் படுத்திக் கொண்டு வந்த விஷயத்தைச் சொன்னேன். அந்த இளம் பெண் என்னிடம் வாசலில் கிருஷ்ணன் பாதம் வரைவது தனது அக்கா என்றும் அவருக்குத்தான் மாப்பிள்ளை பார்க்கிறோம் என்றும் சொன்னார்கள். சிறிது நேரத்தில் அந்த பெண்ணும் வந்து விட்டது. அவர்களின் தாயார் எங்கள் குடும்பம் பற்றி விசாரித்தார். அவர்களைப் பற்றியும் சொன்னார். அவ்வளவுதான் தெரியும். திடீரென்று நான் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலி சடசட என்று நொறுங்கி சுக்கு சுக்காக உடைந்து நான் கீழே விழுந்து விட்டேன்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த அம்மாவும் அவரது மகளும் என்னைக் கைபிடித்து வேறு ஒரு நாற்காலியில் அமர வைத்தார்கள். அடிபட்டு விட்டதா என்று பதறிப் பொய் கேட்டார்கள். நான் அதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டேன். உண்மையில் அடி என்றால் செம அடி . இடுப்புக்குக் கீழே உட்காரும் இடத்தில் சரியாக ஒரு மாதம் வலித்துக் கொண்டிருந்தது. பின்னர் பையனின் புகைப்படம், ஜாதகக் குறிப்பு மற்ற விபரங்களை அவர்களிடம் கொடுத்தேன். நான் கீழே விழுந்த சம்பவம் அங்கு ஒரு இறுக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டதை உணர்ந்து நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டேன். அதன் பின்னர் ஒவ்வொரு கிருஷ்ண ஜெயந்தி அன்றும் காலண்டரை பார்க்கும் பொழுது அடிபட்ட சம்பவம்தான் நினைவுக்கு வரும்.

No comments:

Post a Comment