Wednesday, 30 September 2015

முதியோர் தினம்

எனக்கு வயது  61 முடிந்து விட்டது. இருந்தாலும் மனதளவில் நான் இன்னும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்  சிறுவனாகவே வாழ்கிறேன். என்னைப்
 பற்றி நினைக்கும் பொழுது  என் மனத்திரையில்  என் சிறு வயது தோற்றமே வந்து முன்  நிற்கிறது.கொஞ்ச நேரம் கிடைத்தாலும் கடந்த காலத்தைப் பற்றி நினைக்கும் பொழுது  மனம் என் சிறு வயது  நிகழ்வுகளை மட்டுமே அசை போடுகிறது. இடைப்பட்ட காலங்கள்  மறந்து விட்டதுபோல் உணர்வு. இன்று முதியோர் தினமாம். நான் முதியோனாகிவிட்டேனா  என்பது புரியவில்லை. சாகும் வரை பள்ளி செல்லும் பாலகனாகவே  வாழ்ந்து விட்டுப் போகிறேன்
சிறு வயது நினைவுகள் சுகமானது



சின்ன  சின்னக்  கண்ணனுக்கு  என்னதான்  புன்னகையோ  
என்ற திரைப்பட பாடலில்  வரும் இந்த வரி

பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா
என்னை மிகவும் கவர்ந்த வரி
வாழ்க வளமுடன்.



முகங்கள்

சாமுத்திரிகா லட்சணம் பற்றி ஆய்வு செய்யும் இருவர் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேடி எங்கள் நூலகம் வந்தனர். தமிழில் 1935 ல் வெளியிடப்பட்ட அந்த புத்தகம் சாமுத்திரிகா லட்சணம் சம்மந்தமானது என்றும் சொன்னார்கள். அந்த புத்தகத்தின் சாரம் என்னவென்றால் உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் 20 வகையாகப் பிரிக்கப் பட்டு படைக்கப் பட்டு உள்ளனரவாம். அவர் களின் மாதிரி முகங்கள் அந்த நூலில் வரையப்பட்டு உள்ளனவாம்

ஒவ்வொரு முகத்திற்கும் பொருந்தக்கூடிய பொது குணாதிசயங்கள் மற்றும் பலன்கள் அதில் எழுதப்பட்டிருக்குமாம். என்று சொன்னார்கள். 2/12 லட்சம் நூல்கள் கொண்ட எங்கள் நூலகத்தில் அந்த குறிப்பிட்ட நூல் இல்லை. 

இந்த விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து நான் சந்திக்கும் மனிதர்களின் முகங்களைக் கூர்ந்து நோக்கும் வழக்கம் எனக்குள்ளே துவங்கி விட்டது. நான் சந்திக்கும் மனிதர்களில் சிலரது முகங்கள் வேறு ஒன்று அல்லது பல நபர்களை எனக்கு நினைவு படுத்துகிறது. அதைத்தான் சாயல் என்று சொல்கிறார்களோ என்னவோ?

Thursday, 24 September 2015

மனோன்மணியம் நாடகத்தில்

சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய  மனோன்மணியம் நாடகத்தில்  வரும் சுந்தர முனிவர்   அரசன் மகள்  திருமணம் வேண்டாம் என்று சொல்லுவதற்கு  காரணமாக இப்படி கூறுகிறார் "" குழவிப் பருவம் நழுவும் காலை  களிமிகு  கன்னியர்  உளமும்  வாக்கும்  புளியம் பழமும்  தோடும் போலாம் "
 ஆகா . என்ன அருமையாக  சொல்லி இருக்கிறார் . கல்லூரி கால  வசந்த நினைவுகள்.

மனோன்மணீயத்தில் மற்றும்   ஒரு காட்சி:

நடராஜன் என்பவன்  குடிலன் (மந்திரி) மகள்  வாணியைக்  காதலிப்பான்

இது பிடிக்காத சகடர் என்பான்  அரசன்  ஜீவகன்  முன்பாக  நடராஜனைப்  

பற்றி பிவருமாறு சொல்லுவான்

காவலா ! அவனைப் போலயான் கண்டிலன்
சுத்தமே பித்தன். சொல்லுக் கடங்கான்.
தனியே யுரைப்பன். தனியே சிரிப்பன்.
எங்கெனு மொருபூ இலைகனி யகப்படில்
அங்கங் கதனையே நோக்கி நோக்கித்
தங்கா மகிழ்ச்சியிற் றலைதடு மாறுவன்.

பரற்கலு மவனுக் ககப்படாத் திரவியம்
ஆயிரந் தடவை யாயினு நோக்குவன்.
பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?

என்பான். இக்காட்சியும் வரிகளும்  மனதில் நன்கு பதிந்து விட்டன. சகடரின்  கூற்று  நினைத்து நினைத்து  நகைப்புக்குரியது.

புறநானுற்றுப் போர்ப்பறை

கல்லூரிக்கால  நினைவுகள்
தமிழ் நாட்டு அரசர்கள் தாங்களுக்குள் சண்டையிடுவதை வழக்கமாகக் கொடிருந்தனனர். தமிழர்களின் வீரம் குறித்துப் புலவர்களால் பாடப்பட்ட பாடல்களே புற நாநூறு எனப்படுகிறது . அக்காலத்தில் அரசர்கள் படை எடுக்கும் முன் எதிரி நாட்டு அரசர்களுக்கு போர் தொடுக்கப் போவதை முன்னரே அறிவிப்பார்கள் . அதைத்தொடர்ந்து எதிரி நாட்டு மக்களுக்கும் அது குறித்து இவ்வாறு முன் அறிவிப்பு செய்வார்கள்.



ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி


குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி


Tuesday, 15 September 2015

பவளமல்லி மரம், பூக்கள்

பவளமல்லி மரம் சிறு மரவகையைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் தென் கீழ் ஆசிய நாடு.

தாய்லந்து நாட்டில் காஞ்சனபுரி மாநிலத்திலும் காணப்பட்டது. இது இந்தியா முழுதும் வளரக்கூடியது.வீட்டுத் தோட்டங்களிலும் நந்த வனங்களிலும் வளர்க்கப்படுகிறது. இந்த மரம் வழமான மண்ணில் நன்கு வளரும்..இதற்கு சிறிது வெய்யிலும் நிழலும் தேவைப்படும். 10 முதல் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. நீர் தேங்காத இடத்தில் நன்கு வளரும். இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் கூரான முனைகளையுடையது. எதிர் அடுக்கில் அமைந்தருக்கும். இலைகள் சொரசொரப்பாக இருக்கும் .இலைகள் தளவாடங்கள் மெருகேற்றப் பயன்படும். பூக்கள் பவழ நிறம் பட்டு வகைத் துணிகளுக்கு சாயம் ஏற்றப் பயன்படும். கிளை நுனையில் பூக்கும். பூக்கள் பவழக் காம்பும், வெண்நிறமும் மல்லிகைப்பூப் போல்  அமைந்திருக்கும், நறுமணம் உடையது. பூக்கள் 5 – 7 இதழ்களையுடையது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும். இந்தப் பூக்கள் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிர்ந்து விடும். இந்த மரம் பற்றியும் பூக்கள் பற்றியும் புராணங்களில் இரண்டு கதைகள் சொல்வார்கள். இதன் காய்கள் தட்டையாக வட்ட வடிவில் காணப்படும். இரண்டு விதைகள் இருக்கும்.இந்த மரம் ஆண் மரம் தான். தன்மகரந்தச் சேர்க்கையால் காய்கள் விடும். இந்த மரம் தலவிருட்சமாகக் கருதப் படும். சிவத்தலங்களில் காணலாம். கட்டிங்மூலம் தான் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :– ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் இலைகள், பூக்கள், விதைகள், வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும். வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும்.

இதன் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து முறைக் காச்சலுக்கு தினம் இரு வேளை கொடுத்தால் குணம் காணலாம்.

இம்மர இலையைச் சுடுநீரில் போட்டு நன்றாய் ஊரவைத்து நாள் ஒன்றுக்கு இரு வேளை அருந்து வர, முதுகுவலி, காச்சல் போகும்.

வயிற்றில் புழுக்கள் வெளியேற இவ்விலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அத்தோடு தேன் கலந்து அருந்தினால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், இதன் இலைகளை 200 கிராம் எடுத்து வந்து மண்சட்டியில் போட்டு பதமான அனலிலிட்டு வறுத்து, ஒரு லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காச்சி, இருதய வலுவற்ற குழந்தைகளுக்கும், இரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கும் அரை அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரை நாளைக்கு இரு வேளை கொடுக்கு, குணம் பெறலாம்.