Sunday, 10 May 2015

அன்னையர் தினம்

1966.அப்போ எனக்கு பனிரெண்டு வயசு. நாலு அணாவுக்கு கருப்பட்டியும் ஒரு அணாவுக்கு காப்பி பொடியும் வாங்கிட்டு வரச் சொன்னீங்க. நான் கடைக்கு போயிட்டு வாரதுக்குள்ள செத்துப்போகனும்னு எப்படி அம்மா முடிவு செஞ்சீங்க?

Saturday, 9 May 2015

தணிகை மலை

தணிகை மலை
1999 ம் ஆண்டு  தணிகை மலை  என்ற சிவ பக்தர் எனக்கு அறிமுகம் ஆனார். அவரும் ஒரு அரசுப்பணியாளர்தான். காவி வேட்டி,கதர் சட்டை, கழுத்தில் உருத்திராட்சை கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை,கால்களில்  செருப்பு இல்லாமல் இருப்பார். அவர் முழுநேர  சிவத்தொண்டு புரிவார். அன்னதானம் ஏற்பாடு செய்தல் ,சிவ பிரசங்கங்கள் செய்தல் ஆகியவை  அவரது தொண்டு.
உடல் நலக் குறைவு காரணமாக  நான் நொந்து பொய் இருந்தேன். சாப்பிட்ட மருந்துகளால்  எனக்கு பயன் கிட்டவில்லை.  எங்கள் மருத்துவர்  கடைசியாக என்னிடம்  நீங்கள்  தியானம் கற்றுக் கொள்வது நல்லது என்று எனக்கு அறிவுறுத்தினார்.

தியானம்  எங்கு கற்றுக் கொள்வது  என்பது தெரியாமல் இருந்த எனக்கு  நண்பர் தணிகைமலை அவர்கள்  வேதாத்திரி மகரிஷி குறித்தும் மனவளக் கலை மன்றம் குறித்தும் விவரித்தார்.  நான் வசித்த சைதாப்பேட்டை பகுதியில்  உள்ள மனவளக் கலை மன்றத்தின் முகவரியையும்  பெற்றுத்தந்தார். நன் அங்கு சென்று முறைப்படி உடற்பயிற்சி மற்றும் தியானமுறைகளைக் கற்றுக்கொண்டேன். ஆறு மாதங்களில்  எனக்கு இருந்த உடல்நல க் குறைவு சரியானது. நான் முன்புபோல் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டேன். நான் என்றென்றும் தணிகை மலைக்கு விசுவாசமாக இருக்கிறேன்.

சிலகாலம் அவரை நான் சந்திக்கவில்லை . 2007 ல் ஒருநாள் அவரை எழும்பூர் ரயில்வே  ஸ்டேசனில் வைத்துப் பார்த்தேன். முழு சபாரியுடன் வெற்று நெற்றியுடன், கழுத்தில் கொட்டை இன்றி, கால்களில் ஷூக்களுடன் நின்று கொண்டிருந்தார். என்னைப்பார்த்தும் பாராததுபோல் யாருடனோ  பேசிக்கொண்டிருந்தார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவருடைய நடை உடை பாவனைகள் யாவும்  முற்றிலும் மாறு பட்டு இருந்தன. அவருடைய மாற்றத்துக்கு என்ன காரணம் என்றும் விளங்கவில்லை. நான் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் என்னை இதுவரை பார்த்ததே இல்லை என்ற  வகையில் முகத்தை வைத்திருந்தார். நானும் அவரிடம் எதுவும் பேசாமல்  அகன்று விட்டேன். வாழ்க வளமுடன்

Friday, 8 May 2015

சிறுகதை--எனது அனுபவம்

சிறுகதை-- எனது  அனுபவம்

1980--82 காலகட்டத்தில்  மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன்  பழக்கம் ஏற்பட்டது.  தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை  நடத்தினோம்.  மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள்  வெளிவந்தன. அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள்  வந்தன. சிலர் அக்கதைகளை  படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு  அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை  நிறுத்தி விட்டேன்.
எழுத்தாளர்  வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து  பாராட்டினார். முடிந்தால்  அதை குமுதத்தில்  வெளிவருவதர்க்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.

 எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன் மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.

Thursday, 7 May 2015

மனநிலை

மனநிலை பொதுவாக ஐந்து  வகைப்படும்: அவை
விழிப்புநிலை
கனவு நிலை
உறக்கநிலை
துரியநிலை
துரியாதீத நிலை

இதில் ஒவ்வொரு நிலையும் மேலும் ஐந்து, ஐந்து  நிலைகளாக மாறும் அவை;

விழிப்பில் விழிப்பு
விழிப்பில் கனவு
விழிப்பில்  உறக்கம்
விழிப்பில் துரியம்
விழிப்பில்  துரியாதீதம்.

மனிதர்கள்  பெறும்பாலும்  விழிப்பில் கனவு  என்ற நிலையிலேயே  காலம் கழிக்கிறோம்