Thursday, 14 April 2016

#குற்றபரம்பரையினரும்முத்துத்தேவரும்.

 இந்தியாவை  ஆண்ட ஆங்கிலேய அரசு  அவர்களின் ஆட்சிக்கு குந்தகமாக விளங்கக் கூடிய பல்வேறு பழங்குடி  தேசிய இனங்களை அடையாளம் காணவும் அவர்களின் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைத்திருக்கவும்  குற்றபரம்பரைசட்டம்  ஒன்றினை   1871 (criminal Tribes Act 1871) ஐ  பிறப்பித்தது..அதன்படி  இந்தியாவேங்கும் வாழ்ந்த பல்வேறு  முரட்டு தேசிய  இனக்குழுக்கள் பட்டியலிடப்பட்டு கட்டுப் படுத்தப் பட்டனர். அவர்களைக் கண்காணிபதற்கு காவல்துறை   பயன்படுத்தப் பட்டது.


1911 ஆண்டில் இந்தச்சட்டம் மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.  தமிழ் நாட்டில் 1915  ம்ஆண்டில் அமல் படுத்த ப் பட்டது. அதன்படி பல்வேறு இனக்குழுக்கள்  இனம் காணப்பட்டு  குற்ற பரம்பரையினராக  அறிவிக்கப் பட்டனர்.1918--19 ஆண்டுகளில் மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரியாக  இருந்த லவ்லக்  என்ற வெள்ளைக்கார  காவல்துறை அதிகாரியின்  அறிக்கை யின் அடிப்படையில்  மதுரை மாவட்ட பிரமலை கள்ளர் சமுதாய மக்கள் மீது  குற்ற பரம்பரைச்சட்டம் என்னும்  கைரேகைச்சட்டம் பாய்ந்தது. அதன்படி வயது வந்த ஆண்களைப் பற்றிய விவரங்கள் பதிவேடுகளில் பதிவு செய்யப் பட்டனர்.அவர்கள் குற்றவாளிகளாகக் கருதப் பட்டனர்.. இரவில் போலீஸ் நிலையத்தில் படுக்கவேண்டும்..இரவில் கணக்கு எடுக்கும்போது ஆஜர் சொல்ல வேண்டும் . ஆஜர் ஆகாதவர்கள் பிடிக்கப்பட்டு கடும்தண்டனை வழங்கப் படும்.
இந்த கொடுமையான சட்டத்திற்கு  பலத்த  எதிர்ப்பு கிளம்பியது.  உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காம நல்லூரில் பிரமலைக்  கள்ளர்  இனமக்கள்  கைரேகை  பதிவேடுகளில் தங்களைப் பதிவு செய்ய மறுத்தனர். ஆங்கில அரசு மிரட்டியது மக்கள் பணியவில்லை.3--4 --1920 ம்  நாள் தாசில்தார், போலிஸ் அதிகாரிகள்  மற்றும் ஆயுதப் படையினர் ஒன்று சேர்ந்து பெருங்காமநல்லுருக்குள் புகுந்து  வலுக்கட்டாயமாக ஆண்களைப் பதிவு செய்ய முயன்றனர். அடக்கு முறை ஏவினர்.. போலீஸ் தரப்புக்கு எதிராக கிளர்ந்த மக்கள் மீது  நடத்தப் பட்ட துப்பாக்கி சூட்டில் 17  பேர் வீரமரணம்  அடைந்தனர்.. இந்தக் கலவரம்  அந்த பகுதியைத் தவிர மதுரை மாவட்ட அளவிலோ,,சென்னை மாகாணத்திலோ  இந்திய  வரலாற்றிலோ   பேசப் படவில்லை.. இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல்  இருட்டடிப்பு செய்யப்பட்டு மறக்கப் பட்டுவிட்டது.

பெருங்காம நல்லூர்  கலவரம் நடந்தபோது பக்கத்து கிராமமான  போத்தம்பட்டியில் வசித்தவர் என்தந்தையார் பி. முத்துதேவர்..அப்போது அவர் எட்டுவயது  சிறுவனாக இருந்தார்.கலவரம் பற்றி செய்தி பக்கத்து கிராமங்களில் பரவியது. கிராமமக்கள்  கூட்டம் கூட்டமாக சென்று கலவர பூமியைப்  பார்த்து கதறி அழுதனர்.அந்த சம்பவம் முத் துதேவர்  மனதில் ஆழமாக பதிந்தது. இறந்தவர்கள்  அனைவரும் பக்கத்து கிராம மக்கனின் உற்றாரும் உறவினர்களும் ஆவர்.

பெருங்காம நல்லூர்  கலவரத்துக்கு பிராயச்சித்தம் செய்ய ஆங்கில  அரசு முடிவு செய்தது..6--11--1920 ல் கள்ளர் சமூக சீர் திருத்தச்  சட்டம் ( Kallar Reclamation)  உருவானது.  164 ஆரம்பப் பள்ளிகள்  பிரமலைக் கள்ளர் வாழும் பகுதிகளில்  துவக்கப்பட்டன.கள்ளர் ரெக்ளமேஷனுக்கு பலவித அதிகாரங்கள் வழங்கப்பட்டன. கிராம கள்ளர்  பஞ்சாயத்து அங்கீகரிக்கப் பட்டது. கள்ளர் காமன் பண்டு உருவாக்கப் பட்டது.. கூட்டுறவு,விவசாயம்,தொழில் கல்விக்கு வசதி செய்யப் பட்டது.. அரசு அதிகாரம் கள்ளர் பன்சயத்து களுக்கு வழங்கப்பட்டது. பலவித போராட்டங்களுக்குப் பிறகு கைரேகைச்சட்டம்  1947 may 30  அன்று  தமிழ்நாடு  அரசால் ரத்து செய்யப் பட்டது.

இந்நிலையில்  முத்துதேவர் அவர்கள்   உசிலம்பட்டி அரசுப் பள்ளியில்  பயின்றபின்பு  பள்ளியின் தலைமை ஆசிரியர்  ஜம்புநாத ஐயரின் பரிந்துரையால் சென்னை ஒய் எம். சி.ஏ  வில்  உடற்கல்வி பயிற்சி பெற்றார் ஒய் எம். சி.ஏ  வின் முதல்வர் மிஸ்டர் பக் அவர்களும் அவரது துணைவியாரும்  முத்து தேவரின் குற்ற பரம்பரைப் பின்னணி அறிந்து அவர்பால் அன்பை சொரிந்தனர்.ஜமிந்தார்கள் மற்றும் செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில்  முத்து தேவருக்கு அரசின் சிறப்பு அனுமதி பெற்று  உபகாரச் சம்பளம்  பெற்று தந்தனர். . பின்னர்   ..1930 --40  களில்  ராஜபாளையத்தில் சேவுக பாண்டியர்  உயர் நிலைப் பள்ளியில்  உடற்கல்வி  ஆசிரியராகப்  பன்னிரண்டு ஆண்டுகள்பணி ஆற்றினார்.

அப்பொழுது சேத்தூர் ஜமீன் மற்றும் இராமநாதபுரம் ராஜா  ஆகியோருடன் பழகும்  வாய்ப்பு  கிடைத்தது. அவர்கள் மூலம் கரந்தை தமிழ்ச்சங்க முதல்வர் நா.மு.வேங்கடசாமி  நாட்டார் அவர்கள் அறிமுகம் கிடைத்தது. அவர்   எழுதிய கள்ளர் சரித்திரம்  என்ற நூலை படித்தார். வேங்ககசாமி நாட்டாருடன் பேசிய முத்து தேவர்  கள்ளர்களை பற்றி மட்டும் எழுதிய நீங்கள் மறவர் அகமுடையார்  அனைவரின் சரித்திரத்தையும் சேர்த்து எழுதலாமே என்று கேட்டார். அதற்கு நாட்டார் அவர்கள் அப்பணியை நீங்களே செய்யாலாம்  எனக் கூறியுள்ளார். அது தனக்கு விடுக்கப்பட்ட கட்டளையாகக் கருதி முக்குலத்தோர் சரித்திரம் எழுதவேண்டும் என்ற கரு முத்துத்தேவர் மனதில் உருவானது.

சேத்தூர்  ஜாமீன்,ராமநாதபுரம் ராஜா  ஆகியோர் தம்மிடம் இருந்த தகவல்களைக் கொடுத்து உதவினர். மேலும் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களும் ஆவணங்கள் கொடுத்து முத்து தேவருக்கு உதவுமாறு நோட்டிஸ்  அடித்து வெளியிட்டனர். மேலும் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பத்தில் அரசு ஆவனான்களைப் படிக்கவும் குறிபெடுக்கவும்  அனுமதி பெற்றுத் தந்தனர். 1940 களில் அரசு ஆவணக் காப்பகத்தில் நுழைய முடியாது. மாவட்ட காவல்துறை அதிகாரி மற்றும் கலெக்டர் அனுமதி பெற வேண்டும்.
ஆவணக் காப்பகத்தில் அரிய நூல்களும் அரசு ஆவணங்களும் படித்து வேண்டிய குறிப்புகள சேகரித்தார். அதில் குறிப்பாக பிரமலை கள்ளர் பற்றியும்,குற்றபரம்பரை சட்டம்,லவ்லக் அறிக்கை,பிரமலை கள்ளர்கமீது ரேகைச்சட்ட அமல்,பெருங்காம நல்லூர் கலவரம்,துப்பாகிச்சூட்டில் பலியானவர்கள் விவரம்  ஆகியவைகளுடன், மதுரைக் கள்ளர் நாடுகள், தமிழ்நாட்டில் முஸ்லிம் படை எடுப்பு,நாயக்கர் ஆட்சி,சேதுபதிகள்,பூலித்தேவர், மற்றும் மருது சகோதரர்கள் எழுச்சி,
வெள்ளையருடன் தன்னரசு நாட்டுக் கள்ளர்களின் மோதல்,பாளையப்பட்டு யுத்தம், வெள்ளை யத்தேவனது வீரப்போர் மற்றும் ஏராளமான தகவல்களுடன் சுமார் நாற்பது ஆண்டுகளாக தகவல்களை முத்துதேவர் சேகரித்து வைத்திருந்தார்.

ராஜபாளையத்தில்  பணியில் இருந்தபோது 1940  களில்  வேட்டைக்கு வந்த மதுரை வெள்ளைக்கார கலெக்டர்  முத்துதேவரை  சந்தித்து ஆசிரியர் பணியில் இருந்து விலகி தன்னுடன் வருமாறு அழைத்தார்.முத்துதேவரும் அவ்வாறே செய்தார்.Rural Recreation Officer என்ற பதவியை ஏற்படுத்தி கள்ளர் குல மக்கள் வாழும் பகுதியில் சீர்திருத்தங்களை  மதுரை கலெக்டர்  அமல் படுத்தினார்.. மதுரை தவிர தஞ்சை, திருச்சி ராமநாதபுரம் கலெக்டர்களும்  தேவமார் வசிக்கும் பகுதியில்  முத்து தேவரின் சேவையை பயன்படுத்திக் கொண்டனர். இரண்டாம்  உலக போர் நடக்கும் காலத்தில் ராணுவத்துக்கு  ஆட்கள் சேர்க்கும் பணியில் தேவர் சமூக இளைஞர் களை சேர்ப்பதற்கு வசதியாக recruting officer ஆக பணியாற்றினார். அதற்கென சன்னத் எனப்படும் பட்டயத்தை ஆங்கில அரசு வழங்கியது.
1947  சுதந்திரம் பெற்ற பின்னர்  வெள்ளையர் வெளியேறினர்.அவர்களின் சேவை பிரிவுகள்  கலைக்கப் பட்டன. முத்துதேவர் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையில் பயிற்சி பெற்று  கூட்டுறவுத்துறையில் அலுவராகப் பணிபுரிந்து  1967 ம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின்  மதுரை அருகே கருமாத்தூர் என்னும் கிராமத்தில்  தங்கி இருந்தார்.
அதன்பின் நாற்பது ஆண்டுகாலமாக சேகரித்து வைத்து  இருந்த தகவல்களை தொகுத்து மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு எந்த தமது ஆராய்ச்சி நூலை வெளியிடும் பணியை துவங்கினார்.நூலை வெளியிட நாட்டமங்கலம் மொக்க மாயத்தேவர்,கூடலூர் சிவன்காளைதேவர் மற்றும் கள்ளர் பள்ளிகளின் ஆசிரியப் பெருமக்கள் உதவியினை. பெற்று  நூலின் முதல் பதிப்பை  1976ம்  ஆண்டு மதுரை தமிழ்ச் சங்கத்தில் வைத்து திரு.மூக்கையாத்தேவர்  முன்னிலையில் நடிகர் சிவாஜி கணேசன் வெளியிட்டார். இதன் மூலம்  குற்ற பரம்பரையினர் பற்றியும்,ஆங்கில அரசின் அடக்கு முறையும்,  பெருங்காம நல்லூர்   கலவரம் பற்றியும் வெளிஉலகத்தின் பார்வைக்கு முதன் முதலாக  வெளிச்சம் போட்டுக் காட்டப் பட்டது. புத்தகம் வெளியிட்டாலும் அது தேவமார் சமூகத்தில் எந்தவிதமான  பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.

அச்சிடப்பட்ட பிரதிகள் நன்கொடையாளர்களுக்கும்,கள்ளர் பள்ளி ஆசிரியர் களுக்கும் வழப்பட்டு விட்டன. விளைவு கடலில் கரைத்த பெருங்காயம் போலாகி விட்டது. மக்களிடம் போதுமான புத்தக வாசிப்பு இல்லாதிருந்தது.1980 ம்  ஆண்டு எனக்கு சென்னையில் அரசுப் பணி கிடைத்தது. நானும் தந்தை முத்து தேவரும் சென்னைக்கு வந்துவிட்டோம். இடைக்காலத்தில் சேகரித்த தகவல்களை  மூல நூலுடன் இணைத்து இரண்டாம் பதிப்பு   வெளியிட முடிவு செய்தார் முத்து தேவர் . சென்னையில் வசிப்பதால் நடிகர் சிவாஜிகணேசன் மற்றும் இயக்குனர் பாரதி ராஜா  ஆகியோரை சந்தித்து நிதி உதவி கோரினார். அவர்களும் மனம் உவந்து ஒப்புக் கொண்டனர்.. ஆனால்  அவர்கள் இல்லத்துக்கும் அலுவலகத்துக்கும் அந்த தள்ளாத வயதில் நடந்து நடந்து முத்துதேவர் மனம்  நொந்துபோய்விட்டார்.
இறுதியில்  கோவை  முக்குலத்தோர் சங்கத்தலைவர்  பொன். அருணாச்சல நாட்டார் அவர்கள் பொருள் உதவி செய்தார். மூவேந்தர்குல தேவர் சமூக வரலாறு  இரண்டாம் பதிப்பு  520  பக்கங்களுடன்1982 ல் வெளியிடப்பட்டது.
அதன்பின் பசும்பொன் பைன் ஆர்ட்ஸ். ராஜராஜன்  அறக்கட்டளை  ஆகியவை  முத்துதேவருக்கு  பொன்னாடை போர்த்தி  பாராட்டினர். புத்தகங்களை ஒரு சிலரே  விலை கொடுத்து வாங்கினர். பெறும்பாலான  புத்தகங்களை இலவசமாகவே மக்கள் பெற்றுச் சென்றனர்.

முத்துதேவர் தனது  இறுதிக்காலத்தில்  கருமாத்தூர் ஸ்தல வரலாறு  என்ற கோவில்கள் பல கொண்ட தனது பூர்வீக  கிராமத்தைப் பற்றி எழுதி புத்தகமாக வெளியிட விரும்பினார். அதற்கான  தகவல்களும் சேகரித்து வைத்திருந்தார் . ஆனால் அதை வெளியிடுவதற்கு முன் 1993 ம் ஆண்டு   தனது 82 ஆவது வயதில் கருமாத்துரில் காலமானார்.

இணையத்தில் இந்நூலினைப்  படிக்க இணைப்பு கொடுக்கப் பட்டுள்ளது


மு. நமசிவாயம்

#மூவேந்தர்குலதேவர்சமூகவரலாறு - முத்துத்தேவர்











Thursday, 8 October 2015

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்



கோபுர தரிசனம்  கோடி புண்ணியம் என்பார்கள். பலரும் அதற்கான ஆன்மீக விளக்கங்களும்,அறிவியல் பூர்வமான விளக்கங்களும் கொடுத்துள்ளனர். நானும் பல கோவில்களுக்குச் சென்று  கோபுரங்களை  பார்த்திருக்கிறேன். தமிழர்களின் சிற்பக்கலைக்கு கோபுரங்கள் சாட்சியாக வானுயர  உயர்ந்து நிற்பது ஒருவித பரவசத்தியே  உண்டு பண்ணுகிறது.
பொதுவாக மனிதர்கள் நாம் பிறந்த மண்ணாகிய இந்த பூமியையே உற்று நோக்குவதை  பிரவித்தொழிலாகக் கொண்டுள்ளனர்.மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் தவிர  தங்கம் ,வெள்ளி, இரும்பு முதலிய உலோகப் பொருள்களும்,பெட்ரோலியப் பொருட்களும் ,நவரத்தினங்களும்,இரசாயனங்களும்,மூலிகைகளும், , மற்ற பொருட்களும் மண்ணில் இருந்தே மனிதன் எடுத்துக் கொண்டு தன் பிறவிப் பயன் மறந்து திரிந்து கொண்டு இருக்கிறான்.

தன அடையாளத்தைத் தொலைத்த மனிதனின் கவனத்தை  விண்நோக்கி திருப்புவதன் பொருட்டே  அக்கால ஞானிகள்  வானுயர்ந்த  கோபுரதரிசனம்  நல்ல விஷயம் என்று அது கோடி புண்ணியம் தரும் என்று சொல்லி வைத்தார்கள் என்று நினைக்கிறேன்
விண்வெளியில்  கொட்டிக்கிடக்கின்றன கோடானுகோடி அற்புதங்கள். கோடிக்கணாக்கான சூரியர்களும் சந்திரர்களையும் தவிர என்னவெல்லாமோ  மனிதனின் அறிவுக்கு எட்டாத  ரகசியங்களைக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம். அந்த பிரபஞ்ச ஞானத்தை ஓரளவு  அறிய முயற்சிப்பதுதான்  இன்றைய நவீன விஞ்ஞானம்

பிரபஞ்ச ஞானத்தை  அறிய முற்பட்ட சித்தர்களும்  ஞானிகளும் தமது திறமைக்கு  ஏற்ப  அறிந்த தகவல்களை  முழுமையாகப் பதிவு செய்யவில்லை..அதனால்தான் அவர்கள் அறிந்த விஷயங்கள்  காலத்தால்  மறக்கப் பட்டுவிட்டன. நமக்கு கிடைத்த அவர்களது  சில ஆய்வுகளே  சோதிடக் கலையாகவும்,மருத்துவ நூல்களாகவும், யோக சாத்திரங்கலாகவும் நமக்கு கிடைத்துள்ளன. அவைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களின் எண்ணிக்கையும்  நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கிறது..

மனிதன் பிரபஞ்ச அறிவைப் பெற முடியும்  என்பதை யோக கலை பயிற்சியின் மூலம் தேய்ந்து கொள்ள முடியும் என்பதை பிற்கால  சித்தர்கள் தமது அட்டமா சித்து வேலைகள் மூலமாக  மக்களுக்கு புலப்படுத்தியுள்ளனர்.


 எனவேதான்  மண்ணைத்தவிர்த்து  கொஞ்சம்  விண்ணையும்  பார் என்று சொல்வதற்குத்தான் அதில்  கொட்டிக்கிடக்கின்றன கோடி கோடி அற்புதங்கள்  என்பதற்காக  கோபுரதரிசனத்தை வலியுறுத்தினார்கள் என்று நான் கருதுகிறேன் கோடி புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்  நாம் கொஞ்சம் விண்ணையும்  பார்க்கலாமே.
வாழ்க வளமுடன்
ஏகாம்பரநாதர்  கோவில், காஞ்சிபுரம்




Wednesday, 30 September 2015

முதியோர் தினம்

எனக்கு வயது  61 முடிந்து விட்டது. இருந்தாலும் மனதளவில் நான் இன்னும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்  சிறுவனாகவே வாழ்கிறேன். என்னைப்
 பற்றி நினைக்கும் பொழுது  என் மனத்திரையில்  என் சிறு வயது தோற்றமே வந்து முன்  நிற்கிறது.கொஞ்ச நேரம் கிடைத்தாலும் கடந்த காலத்தைப் பற்றி நினைக்கும் பொழுது  மனம் என் சிறு வயது  நிகழ்வுகளை மட்டுமே அசை போடுகிறது. இடைப்பட்ட காலங்கள்  மறந்து விட்டதுபோல் உணர்வு. இன்று முதியோர் தினமாம். நான் முதியோனாகிவிட்டேனா  என்பது புரியவில்லை. சாகும் வரை பள்ளி செல்லும் பாலகனாகவே  வாழ்ந்து விட்டுப் போகிறேன்
சிறு வயது நினைவுகள் சுகமானது



சின்ன  சின்னக்  கண்ணனுக்கு  என்னதான்  புன்னகையோ  
என்ற திரைப்பட பாடலில்  வரும் இந்த வரி

பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா
என்னை மிகவும் கவர்ந்த வரி
வாழ்க வளமுடன்.



முகங்கள்

சாமுத்திரிகா லட்சணம் பற்றி ஆய்வு செய்யும் இருவர் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேடி எங்கள் நூலகம் வந்தனர். தமிழில் 1935 ல் வெளியிடப்பட்ட அந்த புத்தகம் சாமுத்திரிகா லட்சணம் சம்மந்தமானது என்றும் சொன்னார்கள். அந்த புத்தகத்தின் சாரம் என்னவென்றால் உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் 20 வகையாகப் பிரிக்கப் பட்டு படைக்கப் பட்டு உள்ளனரவாம். அவர் களின் மாதிரி முகங்கள் அந்த நூலில் வரையப்பட்டு உள்ளனவாம்

ஒவ்வொரு முகத்திற்கும் பொருந்தக்கூடிய பொது குணாதிசயங்கள் மற்றும் பலன்கள் அதில் எழுதப்பட்டிருக்குமாம். என்று சொன்னார்கள். 2/12 லட்சம் நூல்கள் கொண்ட எங்கள் நூலகத்தில் அந்த குறிப்பிட்ட நூல் இல்லை. 

இந்த விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து நான் சந்திக்கும் மனிதர்களின் முகங்களைக் கூர்ந்து நோக்கும் வழக்கம் எனக்குள்ளே துவங்கி விட்டது. நான் சந்திக்கும் மனிதர்களில் சிலரது முகங்கள் வேறு ஒன்று அல்லது பல நபர்களை எனக்கு நினைவு படுத்துகிறது. அதைத்தான் சாயல் என்று சொல்கிறார்களோ என்னவோ?

Thursday, 24 September 2015

மனோன்மணியம் நாடகத்தில்

சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய  மனோன்மணியம் நாடகத்தில்  வரும் சுந்தர முனிவர்   அரசன் மகள்  திருமணம் வேண்டாம் என்று சொல்லுவதற்கு  காரணமாக இப்படி கூறுகிறார் "" குழவிப் பருவம் நழுவும் காலை  களிமிகு  கன்னியர்  உளமும்  வாக்கும்  புளியம் பழமும்  தோடும் போலாம் "
 ஆகா . என்ன அருமையாக  சொல்லி இருக்கிறார் . கல்லூரி கால  வசந்த நினைவுகள்.

மனோன்மணீயத்தில் மற்றும்   ஒரு காட்சி:

நடராஜன் என்பவன்  குடிலன் (மந்திரி) மகள்  வாணியைக்  காதலிப்பான்

இது பிடிக்காத சகடர் என்பான்  அரசன்  ஜீவகன்  முன்பாக  நடராஜனைப்  

பற்றி பிவருமாறு சொல்லுவான்

காவலா ! அவனைப் போலயான் கண்டிலன்
சுத்தமே பித்தன். சொல்லுக் கடங்கான்.
தனியே யுரைப்பன். தனியே சிரிப்பன்.
எங்கெனு மொருபூ இலைகனி யகப்படில்
அங்கங் கதனையே நோக்கி நோக்கித்
தங்கா மகிழ்ச்சியிற் றலைதடு மாறுவன்.

பரற்கலு மவனுக் ககப்படாத் திரவியம்
ஆயிரந் தடவை யாயினு நோக்குவன்.
பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?

என்பான். இக்காட்சியும் வரிகளும்  மனதில் நன்கு பதிந்து விட்டன. சகடரின்  கூற்று  நினைத்து நினைத்து  நகைப்புக்குரியது.

புறநானுற்றுப் போர்ப்பறை

கல்லூரிக்கால  நினைவுகள்
தமிழ் நாட்டு அரசர்கள் தாங்களுக்குள் சண்டையிடுவதை வழக்கமாகக் கொடிருந்தனனர். தமிழர்களின் வீரம் குறித்துப் புலவர்களால் பாடப்பட்ட பாடல்களே புற நாநூறு எனப்படுகிறது . அக்காலத்தில் அரசர்கள் படை எடுக்கும் முன் எதிரி நாட்டு அரசர்களுக்கு போர் தொடுக்கப் போவதை முன்னரே அறிவிப்பார்கள் . அதைத்தொடர்ந்து எதிரி நாட்டு மக்களுக்கும் அது குறித்து இவ்வாறு முன் அறிவிப்பு செய்வார்கள்.



ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி


குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி


Tuesday, 15 September 2015

பவளமல்லி மரம், பூக்கள்

பவளமல்லி மரம் சிறு மரவகையைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் தென் கீழ் ஆசிய நாடு.

தாய்லந்து நாட்டில் காஞ்சனபுரி மாநிலத்திலும் காணப்பட்டது. இது இந்தியா முழுதும் வளரக்கூடியது.வீட்டுத் தோட்டங்களிலும் நந்த வனங்களிலும் வளர்க்கப்படுகிறது. இந்த மரம் வழமான மண்ணில் நன்கு வளரும்..இதற்கு சிறிது வெய்யிலும் நிழலும் தேவைப்படும். 10 முதல் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. நீர் தேங்காத இடத்தில் நன்கு வளரும். இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் கூரான முனைகளையுடையது. எதிர் அடுக்கில் அமைந்தருக்கும். இலைகள் சொரசொரப்பாக இருக்கும் .இலைகள் தளவாடங்கள் மெருகேற்றப் பயன்படும். பூக்கள் பவழ நிறம் பட்டு வகைத் துணிகளுக்கு சாயம் ஏற்றப் பயன்படும். கிளை நுனையில் பூக்கும். பூக்கள் பவழக் காம்பும், வெண்நிறமும் மல்லிகைப்பூப் போல்  அமைந்திருக்கும், நறுமணம் உடையது. பூக்கள் 5 – 7 இதழ்களையுடையது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும். இந்தப் பூக்கள் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிர்ந்து விடும். இந்த மரம் பற்றியும் பூக்கள் பற்றியும் புராணங்களில் இரண்டு கதைகள் சொல்வார்கள். இதன் காய்கள் தட்டையாக வட்ட வடிவில் காணப்படும். இரண்டு விதைகள் இருக்கும்.இந்த மரம் ஆண் மரம் தான். தன்மகரந்தச் சேர்க்கையால் காய்கள் விடும். இந்த மரம் தலவிருட்சமாகக் கருதப் படும். சிவத்தலங்களில் காணலாம். கட்டிங்மூலம் தான் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :– ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் இலைகள், பூக்கள், விதைகள், வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும். வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும்.

இதன் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து முறைக் காச்சலுக்கு தினம் இரு வேளை கொடுத்தால் குணம் காணலாம்.

இம்மர இலையைச் சுடுநீரில் போட்டு நன்றாய் ஊரவைத்து நாள் ஒன்றுக்கு இரு வேளை அருந்து வர, முதுகுவலி, காச்சல் போகும்.

வயிற்றில் புழுக்கள் வெளியேற இவ்விலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அத்தோடு தேன் கலந்து அருந்தினால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், இதன் இலைகளை 200 கிராம் எடுத்து வந்து மண்சட்டியில் போட்டு பதமான அனலிலிட்டு வறுத்து, ஒரு லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காச்சி, இருதய வலுவற்ற குழந்தைகளுக்கும், இரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கும் அரை அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரை நாளைக்கு இரு வேளை கொடுக்கு, குணம் பெறலாம்.