Sunday, 10 May 2015

அன்னையர் தினம்

1966.அப்போ எனக்கு பனிரெண்டு வயசு. நாலு அணாவுக்கு கருப்பட்டியும் ஒரு அணாவுக்கு காப்பி பொடியும் வாங்கிட்டு வரச் சொன்னீங்க. நான் கடைக்கு போயிட்டு வாரதுக்குள்ள செத்துப்போகனும்னு எப்படி அம்மா முடிவு செஞ்சீங்க?

Saturday, 9 May 2015

தணிகை மலை

தணிகை மலை
1999 ம் ஆண்டு  தணிகை மலை  என்ற சிவ பக்தர் எனக்கு அறிமுகம் ஆனார். அவரும் ஒரு அரசுப்பணியாளர்தான். காவி வேட்டி,கதர் சட்டை, கழுத்தில் உருத்திராட்சை கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை,கால்களில்  செருப்பு இல்லாமல் இருப்பார். அவர் முழுநேர  சிவத்தொண்டு புரிவார். அன்னதானம் ஏற்பாடு செய்தல் ,சிவ பிரசங்கங்கள் செய்தல் ஆகியவை  அவரது தொண்டு.
உடல் நலக் குறைவு காரணமாக  நான் நொந்து பொய் இருந்தேன். சாப்பிட்ட மருந்துகளால்  எனக்கு பயன் கிட்டவில்லை.  எங்கள் மருத்துவர்  கடைசியாக என்னிடம்  நீங்கள்  தியானம் கற்றுக் கொள்வது நல்லது என்று எனக்கு அறிவுறுத்தினார்.

தியானம்  எங்கு கற்றுக் கொள்வது  என்பது தெரியாமல் இருந்த எனக்கு  நண்பர் தணிகைமலை அவர்கள்  வேதாத்திரி மகரிஷி குறித்தும் மனவளக் கலை மன்றம் குறித்தும் விவரித்தார்.  நான் வசித்த சைதாப்பேட்டை பகுதியில்  உள்ள மனவளக் கலை மன்றத்தின் முகவரியையும்  பெற்றுத்தந்தார். நன் அங்கு சென்று முறைப்படி உடற்பயிற்சி மற்றும் தியானமுறைகளைக் கற்றுக்கொண்டேன். ஆறு மாதங்களில்  எனக்கு இருந்த உடல்நல க் குறைவு சரியானது. நான் முன்புபோல் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டேன். நான் என்றென்றும் தணிகை மலைக்கு விசுவாசமாக இருக்கிறேன்.

சிலகாலம் அவரை நான் சந்திக்கவில்லை . 2007 ல் ஒருநாள் அவரை எழும்பூர் ரயில்வே  ஸ்டேசனில் வைத்துப் பார்த்தேன். முழு சபாரியுடன் வெற்று நெற்றியுடன், கழுத்தில் கொட்டை இன்றி, கால்களில் ஷூக்களுடன் நின்று கொண்டிருந்தார். என்னைப்பார்த்தும் பாராததுபோல் யாருடனோ  பேசிக்கொண்டிருந்தார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவருடைய நடை உடை பாவனைகள் யாவும்  முற்றிலும் மாறு பட்டு இருந்தன. அவருடைய மாற்றத்துக்கு என்ன காரணம் என்றும் விளங்கவில்லை. நான் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் என்னை இதுவரை பார்த்ததே இல்லை என்ற  வகையில் முகத்தை வைத்திருந்தார். நானும் அவரிடம் எதுவும் பேசாமல்  அகன்று விட்டேன். வாழ்க வளமுடன்

Friday, 8 May 2015

சிறுகதை--எனது அனுபவம்

சிறுகதை-- எனது  அனுபவம்

1980--82 காலகட்டத்தில்  மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன்  பழக்கம் ஏற்பட்டது.  தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை  நடத்தினோம்.  மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள்  வெளிவந்தன. அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள்  வந்தன. சிலர் அக்கதைகளை  படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு  அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை  நிறுத்தி விட்டேன்.
எழுத்தாளர்  வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து  பாராட்டினார். முடிந்தால்  அதை குமுதத்தில்  வெளிவருவதர்க்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.

 எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன் மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.

Thursday, 7 May 2015

மனநிலை

மனநிலை பொதுவாக ஐந்து  வகைப்படும்: அவை
விழிப்புநிலை
கனவு நிலை
உறக்கநிலை
துரியநிலை
துரியாதீத நிலை

இதில் ஒவ்வொரு நிலையும் மேலும் ஐந்து, ஐந்து  நிலைகளாக மாறும் அவை;

விழிப்பில் விழிப்பு
விழிப்பில் கனவு
விழிப்பில்  உறக்கம்
விழிப்பில் துரியம்
விழிப்பில்  துரியாதீதம்.

மனிதர்கள்  பெறும்பாலும்  விழிப்பில் கனவு  என்ற நிலையிலேயே  காலம் கழிக்கிறோம்

Monday, 27 April 2015

#கண்ணீர் #TearsRollingDown

#கண்ணீர்

அம்மா செத்தபோதும் வரவில்லை, அப்பா இறந்தபோதும் வரவில்லை ,உடன்பிறந்த மூன்று சகோதரிகள் இறந்தபோதும் வரவில்லை,,சகோதரன் இறந்தபோதும் வரவில்லை .மனைவி நோயுற்று அவதிப்படும்போது மட்டும் கண்களின் ஓரத்தில்  வந்து எட்டிப்பார்க்கிறதே ? அதுவும் கீழே விழுவதில்லை.

Thursday, 23 April 2015

#பரஞ்சோதிபாபாவடபழனிசென்னை. #PARANJOTHIBAABAChennai



பரஞ்சோதி பாபா,வடபழனி,சென்னை.

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது. சென்னை மெஜஸ்டிக் ஸ்டூடியோவின் முன்னாள் அதிபர். தொழில் நஷ்டம் மற்றும் காலில் உண்டான புண் காரணமாக குடும்பத்தினரால் கைவிடப்பட்டார்.வடபழனி கோவில் வாசலில் வெகுகாலம் இருந்தார்.
அவர் ஒரு மகான் என்று கருதி ஒரு சிலர் வந்து அவரை சந்தித்து ஆசி பெற்று சென்றனர். அன்பர ஒருவரின் தயவால் வடபழனி கோவில் தெருவில் ஒரு சிறிய வீட்டில் கடைசிக்காலத்தில் வசித்தார். கடந்த 6-2-2008 ல் அவரை சென்று சந்தித்தேன். சில புகைப்படங்களையும் சிறிய வீடியோவும் எடுத்தேன்.
அவருக்கு வயது 85 என்று சொன்னார்கள்.
அவரை பார்க்க வருபவர்கள் அவருக்கு bread ம் பணமும் வழங்கினார்கள். அதை அவர் பெற்றுக்கொண்டார். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் ஐயா என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.அப்போது அவர் என்னிடம் பேசினார்.வீட்டுக்கு போவதற்கு முன் பக்கத்து கடையில் நாலு வடையும் tea ம் சாப்பிட்டுவிட்டு போங்க என்று சொன்னார். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. -----மு. நமசிவாயம்.




************






Sunday, 19 April 2015

#தம்மண்ணசெட்டியார் #ThammnaChettiyar

#தம்மண்ணசெட்டியார்
சுமார்  90  வயது முதியவர். ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்கள் எழுதி உள்ளார்.
ஒரு அன்பர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திப்பதற்காக என்னை அழைத்து சென்றார். அவர் வீடு பெரிய வீடு. வீட்டில் மகன் மகள், பேரன் பேத்திகள்  என அமர்க்களமாக இருந்தது . அவருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் எழுதிய நூல்களுக்கு நடுவே அமர்ந்திருந்தார். அவர் ஆரம்ப களத்தில் சிறு வியாபாரம் செய்து வந்ததாகவும்  வியாபாரம் நொடித்துப்போய் விட்டதால் பழைய நூல்களை வாசிக்கத்தொடங்கியதாகவும்  சொன்னார். பிறகு தானே சிறு சிறு நூல்கள் எழுதி பல  தலைப்புகளில் வெளியிட்டு வருவதாகவும் சொன்னார். எனக்கும் சில நூல் கள் கொடுத்து படிக்கச்சொன்னார்.
நான் அவரிடம்  #திருமந்திரப் பாடல்கள் சிலவற்றுக்கு வரைந்த படங்கள் ( Now it is to be published #CosmicSecretsAjourneyWithMysticTirumular =  #https://www.tirumular.com/index.php/news/category/exhibitions ) அடங்கிய நோட்டுப் புத்தகத்தை காட்டினேன். அதில் இருந்த படங்களில் சில வற்றுக்கு ஈர்ப்பு சக்தி உள்ளதாகச் சொன்னார். மேலும் நான் பணி  புரியும் நூலகத்துக்கு வருவதாகவும் சொன்னார்

பிறகு இரண்டு முறை என் அலுவலகம் வந்து அந்த தள்ளாத வயதிலும் என்னை சந்தித்து பேசினார். ஒரு முறை என்னை தொலை பேசியில் அழைத்து தன்னை வந்து சந்திக்குமாறு சொன்னார். ஏதோ காரணங்களினால் நான் உடனே போகவில்லை . கொஞ்ச நாள் கழித்து அவரை தொலை பேசியில் அழைத்த பொது அவரது மகன் தம்மண்ண செட்டியார் மறைந்த விஷயத்தை சொன்னார்.
மனசுக்கு  கஷ்டமாக  இருந்தது.

தம்மண்ண செட்டியார் எழுதிய நூல்களின்  பட்டியலை கூகுளில் காணலாம்
அதில் முக்கியமானது = #காதல்+காமம்=கடவுள்